கொழும்பு: பொது வீதிகளில் அதிகளவு கறுப்பு புகையை வெளியேற்றும் வாகனங்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து மேலாண்மை மற்றும் வீதிப் பாதுகாப்புப் பொறுப்பதிகாரி பிரதி பொலிஸ் மா அதிபர் (DIG) டபிள்யூ. பி. ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார்.
சமீபகாலமாக வீதிகளில் அதிக புகை வெளியேற்றும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை கருத்திற்கொண்டு இந்த விசேட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மோட்டார் வாகன ஆய்வாளர்களுடன் இணைந்து பொலிஸார் திடீர் சோதனைகளை முன்னெடுக்கவுள்ளனர்.
பறிமுதல் நடவடிக்கை:
சோதனையின் போது அதிக புகை வெளியேற்றுவது உறுதிசெய்யப்படும் வாகனங்கள் உடனடியாக பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார். வாகனங்களின் தரம் மற்றும் வீதி பாதுகாப்பை உறுதிப்படுத்துவதே இதன் பிரதான நோக்கமாகும்.
பொதுமக்களின் பங்களிப்பு:
இந்த நடவடிக்கையில் பொதுமக்களின் உதவியையும் பொலிஸார் நாடியுள்ளனர். வீதிகளில் இவ்வாறான வாகனங்களை காணும் பட்சத்தில், அதன் இலக்கத் தகடு அல்லது வீடியோ ஆதாரங்களை 070 3500525 என்ற வாட்ஸ்அப் இலக்கத்திற்கு அனுப்பி வைக்குமாறு கோரப்பட்டுள்ளது.
