மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழலைத் தணிக்கும் நோக்கில் ஐக்கிய அரபு அமீரகம் (UAE) மற்றும் ஈரானிய உயர்மட்ட அதிகாரிகள் அரிய வகை தொலைபேசி உரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளதாக UAE அரச ஊடகமான WAM செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் போர் வெடித்ததில் இருந்து, இரு நாடுகளுக்கும் இடையே இடம்பெற்ற முதலாவது உயர்மட்ட இராஜதந்திரத் தொடர்பு இதுவென்பது குறிப்பிடத்தக்கது. ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை ஜனாதிபதியும், துணைப் பிரதமருமான ஷேக் மன்சூர் பின் சயீத் அல் நஹ்யான் (Sheikh Mansour bin Zayed Al Nahyan), ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் (Mohammad Bagher Ghalibaf) உடன் இந்த உரையாடலை முன்னெடுத்தார்.
இந்த சந்திப்பின் போது, பிராந்தியத்தில் நிலவும் தற்போதைய முன்னேற்றங்கள் மற்றும் பதற்றங்களைக் குறைப்பதற்கான வழிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. போர் தொடங்கிய காலத்தில் இருந்து ஈரான் மீதான கடுமையான நிலைப்பாட்டைக் கொண்டிருந்த UAE, தற்போது இராஜதந்திர ரீதியாக பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்திருப்பது சர்வதேச அரசியல் அரங்கில் உற்றுநோக்கப்படுகிறது.
நம்பகமான மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட இராஜதந்திர செய்திகளுக்கு தொடர்ந்தும் KVC Media (www.kuchchaveli.com) தளத்துடன் இணைந்திருங்கள்.
