சர்வதேச CAMA² சான்றிதழைப் பெற்ற முதல் இலங்கையர் எனும் பெருமையைப் பெற்று, குச்சவெளி மண்ணிற்குப் புகழு சேர்த்திருக்கும் வளர்ந்து வரும் இளம் ஆளுமை அப்துல் ரசாக் முஸம்மில் பற்றிய ஒரு சிறப்புப் பார்வை இது.

சர்வதேச ரீதியில் வர்த்தக மேலாண்மை மற்றும் சேவை மேலாண்மைத் துறைகளில் வழங்கப்படும் மிக உயரிய அங்கீகாரமான CAMA² (Certified Asset Management Assessor) சான்றிதழைப் பெற்ற முதல் இலங்கையராக, திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளியைச் சேர்ந்த அப்துல் ரசாக் எம். முஸம்மில் வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

யார் இந்த அப்துல் ரசாக் முஸம்மில்?

திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி, புடவைக்கட்டுப் பிரதேசத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட முஸம்மில், ஆரம்பத்திலிருந்தே தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மைத் துறைகளில் மிகுந்த ஆர்வம் கொண்டவராகத் திகழ்ந்தார். இவர் ஐக்கிய இராச்சியத்தின் புகழ்பெற்ற வெஸ்ட்மின்ஸ்டர் பல்கலைக்கழகத்தில் (University of Westminster) வணிக மேலாண்மையுடன் கூடிய தகவல் அமைப்புகள் துறையில் (BSc Hons in Information Systems with Business Management) இளங்கலைப் பட்டம் பெற்றவர்.

தற்போது இவர் சவுதி அரேபியாவின் மிக முக்கியமான போக்குவரத்து மையமான ஜித்தாவிலுள்ள சர்வதேச விமான நிலையத்தில் (Jeddah International Airport), சொத்துக்கள் மற்றும் கணினிமயப்படுத்தப்பட்ட மேலாண்மைப் பிரிவின் (Assets & CAFM) மேலாளராகப் பணியாற்றி வருகின்றார்.

CAMA² சான்றிதழின் முக்கியத்துவம்

CAMA² என்பது உலகளாவிய ரீதியில் ISO 55000 தரநிலைகளுக்கு இணங்க, ஒரு நிறுவனத்தின் சொத்துக்களை எவ்வாறு திறம்பட நிர்வகிப்பது, அவற்றின் ஆயுள் சுழற்சியைத் திட்டமிடுவது மற்றும் மூலதன முதலீடுகளை எவ்வாறு லாபகரமாகக் கையாள்வது என்பதை உறுதிப்படுத்தும் ஒரு சர்வதேசச் சான்றிதழாகும்.

இத்துறை சார்ந்த நிபுணர்களுக்கு வழங்கப்படும் மிகக் கடினமான தேர்வுகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது. இதில் முதன்முறையாக ஒரு இலங்கையர் தேர்ச்சி பெற்றிருப்பது சர்வதேச அரங்கில் இலங்கையின் பெருமையை உயர்த்தியுள்ளது.

சர்வதேச அனுபவம் மற்றும் ஆளுமை

அப்துல் ரசாக் முஸம்மில் சர்வதேச விமான நிலையங்களின் செயல்பாடுகளில் பாரிய அனுபவம் கொண்டவர். குறிப்பாக, இவர் IBM அங்கீகரித்த Maximo மென்பொருள் நிபுணராக, ஜிட்டா, ரியாத் மற்றும் துபாய் போன்ற பிரம்மாண்ட விமான நிலையங்களில் முழுமையான CAFM அமைப்புகளை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தியுள்ளார்.

இவரது செயல்பாட்டுத் திறனுக்கு உதாரணமாக, விமான நிலையங்களின் 24/7 பணி கட்டுப்பாட்டு மையங்கள் (Work Control Centre) மற்றும் செயல்திறன் மேலாண்மை (KPI) ஆகியவற்றில் புதிய டிஜிட்டல் மாற்றங்களை முன்னெடுத்தமையைக் குறிப்பிடலாம்.

இந்த சாதனைக்குப் பின்னால்…

இந்த வரலாற்றுச் சாதனை குறித்துக் கருத்துத் தெரிவித்த முஸம்மில், தனது வெற்றியின் பின்னணியில் உள்ளவர்களையும் தனது எதிர்காலக் கனவையும் உணர்வுப்பூர்வமாகப் பகிர்ந்து கொண்டார்:

இந்த நம்பமுடியாத மைல்கல்லை எட்ட எனக்கு ஆதரவாக இருந்த எனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக, என் விரல் பிடித்து பள்ளிப்படிப்பில் ஊக்கமளித்த .எச்.எம். அன்வர் மௌலவி அவர்கள் குறிப்பிடத்தக்கவர். குச்சவெளியிலிருந்து உலகத்தரம் வாய்ந்த தொழில் நிபுணர்களை உருவாக்க வேண்டும் என்ற விதையை என்னுள் விதைத்தவர் அவரே. அதற்கேற்ப குச்சவெளியிலிருந்து இன்னும் பல தொழில்முறை நிபுணர்களை சர்வதேச அரங்கிற்குத் கொண்டு வருவதே எனது லட்சியமாகும்.”

தொடர்ந்து அவர் பேசுகையில், “விழுந்த போதெல்லாம் தோள் தட்டித் தூக்கிவிட்ட அனைத்து ஆசிரியப் பெருந்தகைகளையும் இந்நேரத்தில் நன்றியுடன் நினைவு கூர்கிறேன். அல்லாஹ்வின் அருட்பார்வையும் எனது குடும்பத்தினரின் பூரண ஒத்துழைப்புமே இந்த சாதனைக்கு உரமாக அமைந்தது” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

இலங்கை இளைஞர்களுக்கு ஒரு முன்னுதாரணம்

கிராமப்புறப் பின்னணியிலிருந்து வந்து, உலகத்தரம் வாய்ந்த ஒரு நிபுணராக உருவெடுத்துள்ள முஸம்மிலின் வெற்றி, குச்சவெளி மற்றும் திருகோணமலை மாவட்ட இளைஞர்களுக்கு ஒரு மிகப்பெரிய ஊக்கமாகும்.

தமது ஊரிலிருந்து தன்னைப் போன்ற பல நிபுணர்களை உருவாக்க வேண்டும் என்ற அவரது கனவு, அப்பகுதி இளைஞர்களுக்கு ஒரு புதிய நம்பிக்கையை வழங்கியுள்ளது. இலங்கையின் பெயரை சர்வதேச பொருளாதார மேலாண்மை சமூகத்தில் வலுப்படுத்தியுள்ள முஸம்மிலின் இந்தச் சாதனைக்கு KVC Media மற்றும் நண்பர்கள் வட்டம் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.

Reference : https://www.wpiam.com/en_uk/member_directory/abdul-razak-muzammil/

By Admin