‘100 வாழ்க்கை பாடங்கள்’ (நூலாய்வு) ஆர்.சதாத், கிண்ணியா.

(எண்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகையும் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட வாசிப்பாளர்களும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட எழுத்தாளர்களையும் கொண்ட கிண்ணியா மண்ணில் வெறும் எழுத்தாளர்கள் இருவர்தான் இந்நூலை இதுவரை கொள்வனவு செய்துள்ளதாக அறியக்கிடைத்ததும் வடித்த இரத்தக்கண்ணீரே ‘அறிவுப்பசி வறுமையில்….’ எனும் இத்தலைப்பு.)

அறிமுகம் (Introduction)

அண்மையில் வெளியிடப்பட்ட காத்திரமான படைப்புகளில் ஒன்றே ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’. உஸ்தாத் ஏ.சி. அகார்முகம்மத் அவர்களால் எழுதப்பட்ட இந்நூல் என் கரம் கிட்டியதும் வரமாகக் கொண்டு வாசித்தேன். அவர்களின் சிந்தனையும் அறிவாற்றலும் அனுபவமும் இரண்டறக்கலந்தமைத்து அவற்றை நூல் வடிவில் வடித்துள்ளார்.

மனித வாழ்வின் நோக்கம், அதன் பயணம், வெற்றி, தோல்வி குறித்த புரிதல்கள் ஆகியவை ஒவ்வொரு காலகட்டத்திலும் மறுவரையறை செய்யப்படுகின்றன. நவீன உலகம் அளிக்கும் பொருளாதார வெற்றி மையமான பார்வைக்கு மாறாக, இஸ்லாம் மனித வாழ்க்கையை ஈமான், அஹ்லாக் (ஒழுக்கம்), பொறுப்பு, இறைவன் சார்ந்த நம்பிக்கை ஆகிய அடிப்படைகளில் அமைக்கிறது.

‘100 வாழ்க்கை பாடங்கள்’ என்ற இந்நூல், இஸ்லாமிய வாழ்க்கைத் தத்துவத்தை எளிய பாடங்களாக வடிவமைத்து வாசகனுக்கு வழங்கும் முயற்சியாகக் காணப்படுகிறது. வஹியே தீர்வு -இன்னும் நூறு ஆண்டுகளுக்குப்பின் என 100 தலைப்புகளில் கவர்ச்சியான அட்டையுடன் கனதியான கருத்துகளுடன் வடிவமைக்கப்பட்டிருப்பது அதன் உருவச் செழிப்பை மெருகூட்டுகின்றன.

உண்மையில் இந்நூல், எங்கள் கையில் தவழ்ந்தால் எம் அறிவிப்பசிக்கு ஒரு புரியாணியாகவே அமையும். அருகிலே ஒர் அறிஞனாகவும் நண்பனாகவும் தந்தையாகவும் தாயாகவும் இறையருளுடன் எம்மிடம் கைகுலுக்கிப் பேசுகிறது.

ஒருவன் உலகம் உள்ளவரை வாழவேண்டுமென்றால் அவனது ஏதோ ஒன்று இவ்வுலகில் நடமாடவேண்டும். உடல், சிந்தனை, ஆன்மா இம்மூன்றும் மனிதனுடையவை. இவற்றுள் இறப்புடன் அவனுடல் போய்விட உலகமுள்ளவரை அவன் சிந்தனைகள் நிலைக்கும்.உலகமுடிவின் பின் எஞ்சியிருப்பது அவன் ஆன்மா மட்டுமே. நபிகள் நாயகம்(ஸல்), யேசுகிறிஸ்து, புத்தர், பிளட்டோ,அரிஸ்டோட்டில், காந்தி என எத்தனையோ மகான்கள் இன்னும் வாழ்கிறார்களென்றால் காரணம் என்ன? அவர்களின் பேச்சுகள்இசிந்தனைகள் எல்லோராலும் இன்றும் பேசப்பட்டுக் கொண்டிருப்பதனால் ஆகும். இந்தவகையில் ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ தந்த உஸ்தாத் அவர்களும் உலகமுள்ளவரை வாழ்ந்துகொண்டே இருப்பார்கள்.

இவ்வுலகில் அறிவுச் செல்வமின்றி உலாவும் எமக்கு இந்நூல், எம் தோளைத் தட்டிக் கொடுத்து பஞ்சத்தைப்போக்க ஆற்றப்படுத்தும். இந்நூலைப் பற்றி நான் எழுதுவது ‘கொல்லன் தெருவிலே ஊசி விற்கச்செல்லும் அற்பமான மனநிலையே என்னுள் உதிர்கிறது. சில இடங்களில் மயிலிறகால் தடவிஇ பல இடங்களில் சம்மட்டி கொண்டு இதயச் சுவரில் இரும்பாணி கொண்டு அடித்தது போல அப்படியே அப்பிக் கொள்ளும் வகையில் சொல்நயமும் சுவையும் அழகும் கொண்டு கலந்து தந்திருக்கின்றார்.

ஒரு நூல் வாசகனின் கையில் வந்து சேர்ந்த தருணத்திலேயே அவனிடம் ஏதோ ஒன்றை வாக்குறுதி அளிக்கிறது. அந்த வாக்குறுதி சில நேரங்களில் அறிவாக இருக்கலாம். சில வேளைகளில் ஆறுதலாக இருக்கலாம்;. இன்னுஞ் சில சமயங்களில் வாழ்க்கையைப் பற்றிய புதிய பார்வையாகவும் இருக்கலாம். ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ என்ற இந்நூல், அந்த மூன்றையும் ஒரே நேரத்தில் தரும் ஒரு முயற்சியாக வாசகனின் மனக்கண்ணில் தோன்றுகிறது.
இன்றைய மனிதவாழ்வு வேகமும் குழப்பமும் நிறைந்ததாக மாறிக்கொண்டிருக்கிறது. அறிவு பெருகிய அளவுக்கு மன அமைதி குறைந்து வரும் காலமிது. இப்படிப்பட்ட சூழலில்,வாழ்க்கையைப் புரிந்து கொள்ள வழிகாட்டும் ஒரு நூல் நம்கையில் கிடைப்பது ஒரு பொக்கிஷமாகும். ‘100 வாழ்க்கை பாடங்கள்’ என்ற இந்நூல்இ அந்த நற்செய்தியை இஸ்லாமிய பார்வையில் மௌனமாகவும் உறுதியாகவும் எடுத்துச் செல்கிறது.

வாழ்க்கையை எப்படிச் வாழ வேண்டும்? என்ற அடிப்படைக் கேள்விக்கு, கோட்பாடுகளால் அல்லாமல் ஈமான், அனுபவம், மனிதநேயம் ஆகிய மூன்றின் சங்கமத்தால் பதிலளிக்கிறது. அதுவே இப்புத்தகத்தின் மகுடமாக அமைகிறது. இஸ்லாமியப் பார்வை என்பது போதனை அல்ல; அது ஒரு வழிகாட்டல். பல இஸ்லாமிய நூல்கள் போதனைச் சாயலில் எழுதப்படுவது வழக்கம். ஆனால், இந்நூல் அந்த வழியைத் தேர்ந்தெடுக்கவில்லை. குர்ஆனும் ஹதீஷஸும் தரும் அடிப்படைக் கருத்துகளை அடித்தளமாகக் கொண்டு, அவற்றை நவீன மனித வாழ்வின் சிக்கல்களுடன் இணைத்து விளக்குகிறது. இதனால், வாசகனை ஒரு மாணவனாக அல்லது ஒரு பயணியாக இந்த நூலுடன் பயணிக்கச் செய்கின்றார்.

அதன் உருவ, உள்ளடக்கத்தின் அடிப்படையில் இந்நூலை நோக்குவோமானால்,
உருவத்தின் அடிப்படையில் 100 தனித்தனி வாழ்க்கைப் பாடங்களாக சுருக்கமான தலைப்புகளுடன் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு பாடமும் வாசகனைச் சோர்வடையச் செய்யாத வகையில் தெளிவாகவும், கருத்துச் செறிவுடன் அமைக்கப்பட்டுள்ளது. எளிய மொழிநடை, நேரடி சொல்லாட்சிகள், தேவையற்ற அலங்காரமின்றி கருத்தை நேராக எடுத்துரைக்கும் அமைப்பு ஆகியவை இந்த நூலை அனைத்து வயதினருக்கும் அணுகத்தக்கதாக மாற்றுகின்றன.

பாடங்களின் தொடர்ச்சி வாசகனை சிந்தனையிலிருந்து செயலுக்குத் தள்ளும் வகையில் அமைந்துள்ளது ஒவ்வொரு தலைப்பினையும் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் அணுகும்பாங்கு படிப்போரை ஈர்த்தெடுக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும், உருவக்கட்டமைப்பினை நோக்குவோமானால்
இந்த நூல் 100 தனித்தனி வாழ்க்கைப் பாடங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பாடமும் ஒரு மையக் கருத்தை முன்வைத்துஇ மனித வாழ்வில் அதன் பயன்பாட்டை விளக்குகிறது. நூலின் நோக்கம் மூன்று தளங்களில் செயல்படுகிறது:

  • இஸ்லாமிய அடிப்படை மதிப்புகளை நினைவூட்டல்
  • நவீன மனித வாழ்க்கைச் சிக்கல்களுக்கு இஸ்லாமிய தீர்வுகளை முன்வைத்தல்
  • வாசகனின் தனிப்பட்ட ஒழுக்க மற்றும் மனநிலை வளர்ச்சியை ஊக்குவித்தல்
    இந்த கட்டமைப்பு, வாசகனுக்கு தொடர்ச்சியான வாசிப்பையும் தனித்தனி பாடங்களாகவும் அணுகும் வசதியை அளிக்கிறது.

சுருக்கம் (Abstract)

100 உள்ளடக்கங்களைக் கொண்ட இந்நூல், இன்றைய உலகச் சூழலில் மனித வாழ்வு பல்வேறு மனஅழுத்தங்களுக்கும் மதிப்பீட்டுக் குழப்பங்களுக்கும் உட்பட்டுள்ளது. இத்தகைய நிலையில் மத அடிப்படையிலான வாழ்க்கை வழிகாட்டி நூல்கள் மனித மன அமைதிக்கும் ஒழுக்க வளர்ச்சிக்கும் முக்கிய பங்காற்றுகின்றன. ‘100 வாழ்க்கை பாடங்கள்’ எனும் இஸ்லாமிய பார்வையில் அமைந்த இந்நூல், குர்ஆன் மற்றும் ஹதீஸ் அடிப்படையிலான வாழ்க்கைத் தத்துவங்களை சமகால மனித அனுபவங்களுடன் இணைத்து விளக்குகிறது.

கருத்தியல் நோக்கு (Conceptual view)

100 வாழ்க்கை பாடங்கள் ஈமானும் அனுபவமும் சந்திக்கும் இடம் ஒவ்வொரு வாழ்க்கை பாடமும், ‘இதைச் செய்ய வேண்டும்’ என்று கட்டளையிடுவதில்லை. மாறாக, ‘இதைச் செய்தால் வாழ்க்கை எளிமையாகும்’ என்ற உணர்வை மெதுவாக விதைக்கிறது. இது ஒரு விமர்சகப் பார்வையில் பார்த்தால்இ நூலின் மொழிநடையின் மிகப்பெரிய வெற்றியாகும். இதற்கு எடுத்துக்காட்டாக ஒரு சந்தர்ப்பத்தில் அலி (றழி) அவர்கள் தனது மகனை விளித்து,
“மகனே, குடும்ப உறவை பேணாதவனோடு சகவாசம் கொள்ளாதே. அவன் அல்லாஹ்வினால் அல்-குர்ஆனில் மூன்று இடங்களில் சபிக்கப்பட்டிருக்கின்றான்” என்று உபதேசம் செய்தார்கள்.

சொந்தங்களைப் பேணாதவன் பெரும் பாவியும் நஷ்டவாளியுமாவான் என்றும் அல்-குர்ஆன் எச்சரிக்கின்றது. மறுமையிலும் அவனது நிலை பயங்கரமாக அமையும்.
لا يَدْخُلُ الْجَنَّةَ قَاطِع
“குடும்ப உறவை துண்டித்து வாழ்பவர் சுவனம் நுழைய மாட்டார்” (புகாரி, முஸ்லிம்) என்பது நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கை. என அழகிய உபதேசம் ஒவ்வொரு தலைப்பையும் அலங்கரிக்கின்றது.

ஈமானின் ஒளியில் இந்நூலில் உள்ள 100 பாடங்களும், மனித வாழ்வின் பல்வேறு நிலைகளைத் தொடுகின்றன: தன்னம்பிக்கை, பொறுமை, நேர்மை, பொறுப்பு, உறவுகள், தோல்வி, வெற்றி, துன்பம், துஆ, தவக்கல், சப்ர் போன்ற கருத்துகள் எல்லாம் இஸ்லாமிய ஒளியில் விளக்கப்படுகின்றன.

இங்கு வெற்றி என்பது வெறும் பொருளாதார உயர்வாக வரையறுக்கப்படவில்லை. உண்மையான வெற்றி என்பது அல்லாஹ்வின் திருப்தியை நோக்கி நகரும் மனநிலை என்பதையே நூல் மீண்டும் மீண்டும் நினைவூட்டுகிறது. இந்தக் கோணம், இன்றைய பொருளாதார மைய உலகில் மிக முக்கியமான விமர்சனப் புள்ளியாகத் திகழ்கிறது. ‘தள்ளிப்போடாதீர்’ எனும் தலைப்பில் அதன் தாற்பரியம் பற்றி பின்வருமாறு தருகிறார்.
நற்காரியங்களை தள்ளிப்போடுபவர் இறுதியில் கைசேதப்பட வேண்டியிருக்கும். அந்தக் கைசேதமும் கவலையும் அவருக்கு எவ்வித பயனையும் தரப்போவதில்லை. இத்தகைய மனிதனின் நிலையை அல்-குர்ஆன் பின்வருமாறு சொல்கின்றது.

حَتَّى إِذَا جَاءَ أَحَدَهُمُ الْمَوْتُ قَالَ رَبِّ ارْجِعُونِ لَعَلِّي أَعْمَلُ صَالِحًا فِيمَا تَرَكْتُ كَلَّا إِنَّهَا كَلِمَةٌ هُوَ قَائِلُهَا وَمِن وَرَائِهِم بَرْزَخٌ إِلَى يَوْمِ يُبْعَثُونَ
“முடிவில் அவர்களில் ஒருவருக்கு மரணம் வரும்போது ‘என் இறைவா! நான் விட்டு வந்ததில் நன்மை செய்வதற்காக என்னைத் திருப்பி அனுப்புங்கள்!’ என்று கூறுவான். அவ்வாறில்லை! இது அவன் சொல்லும் (வெறும் வாய்) வார்த்தைதான். அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை அவர்களுக்குப் பின்னால் திரை உள்ளது.” (ஸ{ரா அல்-முஃமினூன்: 99-100)

மேலும், நல்லமல்களை அவ்வப்போது செய்து முடிக்காமல் தள்ளிப்போடும்போது சுமை கூடி, மலைப்பும் தயக்கமும் ஏற்படும். காரியங்கள் சிரமமாகி, செய்பவரும் நொந்து வேதனைப்பட வேண்டிவரும். இறுதியில் நற்காரியங்களை செய்ய முடியாமல் நன்மைகளை இழந்த நஷ்டவாளியாக மாற வேண்டி வரும். இதனால் உலக மற்றும் மறுமைக்கான வெற்றிகள் யாவும் தள்ளிப்போடலின் விளைவு தோல்வியாகும். ஏன விளக்குகிறார்.

உணர்வுபூர்வமான மொழிப்பாவனை இதயத்தைத் தொடும் நடையில் அமையப்பெற்றிருப்பதும் ஒருசிறப்பம்சமாகும். இந்நூலின் மொழி கடினமான மத மொழியாக இல்லை. அது தாயின் அறிவுரையைப் போல மென்மையானது; நண்பனின் ஆலோசனை போல நெருக்கமானது. சில பாடங்கள் வாசகனின் மனதை அமைதியாக்கும்; சில பாடங்கள் தன்னையே கேள்வி கேட்க வைக்கும்; இன்னும் சில பாடங்கள் கண்ணில் ஈரம் வரச் செய்யும்.இதனை பின்வருமாறு காட்டுகிறார்.

“பொதுவாக உலக வாழ்க்கையில் மனிதர்கள் இருவகை கவலைகளால் அவஸ்தைப்படுவார்கள்.

  1. இறந்த காலம் தொடர்பிலான கவலைகள்.
  2. எதிர்காலம் பற்றிய கவலைகள்,
    கடந்த கால நிகழ்வுகள், அசம்பாவிதங்கள் முதலானவற்றை நினைத்து வேதனைப்படுவதும், அடுத்து என்ன நடக்குமோ, எதிர்காலம் எப்படி அமையுமோ என்று எண்ணி கவலை கொள்வதும் பலருடைய வாழ்க்கையை பாழ்படுத்திக் கொண்டிருக்கின்றன.

நடந்ததை நினைத்து கவலைப்படுபவரும் நடக்க இருப்பதை நினைத்து அலட்டிக் கொள்பவரும் தனது நடப்பு வாழ்க்கையை வாழத்தவறி விடுகின்றார். இறந்த காலத்திலோ அல்லது எதிர்காலத்திலோ வாழ்பவர் தன் கையில் இருக்கும் நிகழ்காலத்தை தொலைத்து விடுகின்றார்.
நேற்றைய நாள் வரலாறு, நாளைய தினம் புதிர்நிலை, இன்றைய நாள்தான் இறைவனால் கொடுக்கப்பட்ட பரிசு. அதனால்தான் நிகழ்காலம் ஆங்கில மொழியில் “present” என அழைக்கப்படுவதாகச் சொல்வார்கள். இந்த வார்த்தைக்கு பரிசு என்றொரு பொருளும் உண்டு.

நேற்றைய நாளை மாற்ற முடியாது. நாளைய நாள் நம் கையில் இல்லை. இன்றைய நாளே நமது கையிலுள்ளது. இந்த நாளை அனுபவிக்க வேண்டும்; உச்சநிலையில் பயன்படுத்த வேண்டும். அதுவே அறிவுடமை; வாழ்க்கையை மகிழ்ச்சிகரமாக அமைத்துக் கொள்வதற்கான வழி. இந்த இரு வகையான கவலைகளிலிருந்தும் விடுபடுவதற்கு சிறந்த வழி இறை நம்பிக்கைதான்.”

இந்த உணர்வுப் பாங்கு நூலை வெறும் வாசிப்புக்கான ஒன்றாக இல்லாமல், மீண்டும் மீண்டும் திறந்து பார்க்க வேண்டிய வாழ்க்கைத் துணையாக மாற்றுகிறது.நவீன மனிதனுக்கான இஸ்லாமிய பதில் இன்றைய மனிதன் சந்திக்கும் மன அழுத்தம்இ அவசரம், போட்டி, தனிமை போன்ற பிரச்சினைகளுக்கு இந்த நூல் நேரடியாகப் பதிலளிக்கிறது. ‘தவக்கல்’ (அல்லாஹ்வின் மீது முழு நம்பிக்கை) என்ற கருத்தை, சோம்பேறித்தனமாக இல்லாமல் பொறுப்புடன் கூடிய நம்பிக்கையாக விளக்குவது நூலின் முக்கியமான பங்களிப்பாகும்.

இது இஸ்லாமிய கருத்துகளைப் பற்றிய ஒரு சமகால விமர்சனமாகவும் செயல்படுகிறது. தவறான புரிதல்களைச் சீர்செய்து, உண்மையான அர்த்தத்தை வாசகனுக்குக் கொடுக்கிறது.
அனைவருக்கும் உரிய இந்நூல் முழுக்க இஸ்லாமிய பார்வையில் எழுதப்பட்டிருந்தாலும், அதன் வாழ்க்கைப் பாடங்கள் மனிதநேயத்தின் பொது மொழியில் பேசுகின்றன. அதனால், இது முஸ்லிம் வாசகர்களுக்கே மட்டுமல்ல் வாழ்க்கையை அர்த்தமுடன் வாழ விரும்பும் அனைவருக்கும் பொருந்தக்கூடியதாக மாறுகிறது. இந்நூல் இலக்கிய அலங்காரங்களை நாடாமல் கருத்தின் வலிமையை நம்புகிறது. சில இடங்களில் வாசிப்போர் தன்னைப்பற்றியே சிந்திக்க வைக்கும் இடைவெளிகளும் உள்ளன. இந்த இடைவெளிகளே இந்நூலின் பலமாகவும் இருக்கின்றன.

(ஏ.ஆர்.எம்.முஸம்மில் எழுதிய “மாற்றி யேசிப்போம்” எனும் நூல்….. எனது அடுத்த நூல்பற்றிய பார்வையாகத் தொடரும்………. )

Leave a Reply