நாளை உலகளாவிய ரீதியில் உலக அரபு மொழி தினம் விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது.
ஆனால் ஒரு கேள்வி நம் உள்ளங்களைத் தட்டுகிறது…

ஏன் இந்த மொழியை நாம் கொண்டாட வேண்டும்?

எம்மைப் படைத்த இறைவன்,மனித குலத்திற்கு தனது இறுதி தூதை அரபு மொழியில் அருளினான். அந்த இறைச் செய்தியையே நாம்
திருமறை (அல் குர்ஆன்) என அழைக்கிறோம்.
அதை உயிரிலும் மேலாக நேசிக்கிறோம் என்று கூறுகிறோம்.

ஆனால்…எந்த மொழியில் திருமறை இறங்கியதோ, அந்த மொழியை கற்றுக் கொள்ளும் ஆர்வம் எம்மிடம் எத்தனை பேருக்கு உள்ளது?

இறைவனின் வார்த்தைகளை அதன் முழு உயிரோட்டத்தோடும், அழகோடும், ஆழத்தோடும்
புரிந்து கொள்ள வேண்டும் என்ற
ஆர்வம் நம்மிடம் எவ்வளவு இருக்கிறது?

உத்தம தூதரை (ஸல்) உயிரிலும் மேலாக நேசிக்கிறோம் என்று சொல்வோம். ஆனால், அவர்கள் பேசிய மொழி, அவர்கள் உச்சரித்த ஒவ்வொரு வார்த்தையையும் அதே உணர்வோடு புரிந்து கொள்ள துடிப்பவர்கள் நம்மில் எத்தனை பேர்?

“திருமறை இதயத்தின் வசந்தம்,
பார்வையின் ஒளி,கவலைகளைத் துடைக்கும் மருந்து”என்று நாம் பிரார்த்திக்கிறோம்.

அப்படியானால்,அந்த திருமறை இறங்கிய மொழியை படிப்பதற்கும், புரிவதற்கும்
நாம் என்ன முயற்சி செய்திருக்கிறோம்?

👉 இந்த கேள்விகளை நம்மிடம் எழுப்பும் நாளே
நாளைய நாள்.

இது அரபு உலகம் மட்டும் கொண்டாட வேண்டிய நாள் அல்ல.ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயமும்
உணர்ந்து கொண்டாட வேண்டிய நாள்.

அரபு கலாசாலைகளில்,மதரஸாக்களில்,
பள்ளிகளில்,மனித உள்ளங்களில்
இந்த நாள் நினைவூட்டப்பட வேண்டும்.

அரபு நாடுகள் இந்த மொழிக்கு
உயிர் கொடுத்து, மரியாதை அளித்து
பெரும் விழாக்களாகக் கொண்டாடுகின்றன.

அதில் குறிப்பாக,சவூதி அரேபியா,
அரபு மொழிக்கு உயிர் ஊட்ட வேண்டும் என்ற
உயரிய சிந்தனையோடு இந்த நாளை அர்த்தமுள்ள வகையில் கொண்டாடுகிறது.

அல் குர்ஆன் மனனப் போட்டிகள் மூலம்
திருமறையை மனித இதயங்களில்
ஆழமாகப் பதியச் செய்வதுபோல்,
அரபு மொழியையும் நினைவுபடுத்தி
அந்த மொழிக்கு மரியாதை செலுத்தும் நாளாக
நாளைய நாள் அமைய இருக்கிறது.

இந்த நாள்,நம் வாழ்வில் முக்கியமான நாள்.
திருமறையைப் புரிந்துகொள்ள
ஒரு படி நம்மை அருகே கொண்டு வரும் நாள்.

இந்த உலக அரபு மொழி தினம்,நம்மை அரபு மொழியை நேசிக்க, கற்க, புரிந்து கொள்ள
ஊக்குவிக்கும் நாளாக அமையட்டும்.

அரபு மொழி –இறைச் செய்தியின் மொழி.
இதயங்களை இணைக்கும் மொழி.

இந்த மொழி வாழ வேண்டும் எல்லோரது உள்ளங்களிலும்.

கசப்பான விடயம் அரபு மொழி தெரியாமல் அரபு மொழியை ஓதும் மொழி மட்டும் ஆக்கிவிடக் கூடாது. என்றும் வாழும் மொழியாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற செய்தியை நாளைய கொண்டாட்டம் நிச்சயமாக தரும் என்று நம்புகிறேன்.

இலங்கை திருநாட்டில் அண்மைக்காலமாக இந்த நாளில் இப்படி ஒரு கொண்டாட்டம் நடைபெறுகிறது அது எமது சவுதி அரேபிய தூதரகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு இந்த நாளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அஷ்ஷெய்க் அப்துல் அஸீஸ் (நளிமி)

Leave a Reply