குச்சவெளி சல்லிமுனை பகுதியில் நேற்று நிகழ்ந்த இந்த துயரச் சம்பவம், நம் கிராமத்தின் இதயத்தை நொறுக்கி விட்டது. 15 வயது சிறுவன் ஐயூப்கான் இபாஸ் தரம் 09 மாணவன், சட்டவிரோதமாக இழுக்கப்பட்ட மின்கம்பியில் சிக்கி உயிரிழந்த செய்தி, ஒரு கணம் என்னை செய்வதறியாது திணறடித்து விட்டது – ஆம் குச்சவெளியில் ஒவ்வொரு குடும்பத்தையும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.

வீட்டுத் தோட்டத்திற்காக இழுக்கப்பட்டிருந்த மின்கம்பியில் மின்சாரம் துண்டிக்கப்படாமல் விடப்பட்டதே இந்த விபரீதத்தின் காரணம்.
இது ஒரு தவறு அல்ல—இது ஒரு குற்றம்,
இது ஒரு கவனக்குறைவு அல்ல, இது ஒரு உயிரைக் காவு வாங்கிய பொறுப்பின்மை, இந்த பொறுப்பு குறித்த வீட்டுக்காரரை மட்டும் சார்ந்தது அல்ல மாறாக உச்சத்தில் இருக்கும் பிரதேச சபையிலிருந்து பள்ளி நிருவாகம் தொட்டு பக்கத்துக்கு வீட்டுக்காரர் முதல் ஒட்டு மொத்த கிராமமும் பொறுப்புக்கூற வேண்டிய ஒரு குற்றம்!

நம்மை சுற்றி நிகழும் சட்டவிரோத மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தும் நிகழ்வுகளை கண்டும் காணாமலே விட்டு விட்டு கடந்துசெல்ல கற்றுக்கொண்டதன் பிரதிபலனே இன்று ஒரு பாலகனை பழிகேடாக்கி இருக்கிறது!

மின்சாரம் செலுத்தி பயிரை பாதுகாக்க நினைப்பது எவ்வளவு முட்டாள் தனமான செயலாக இருக்க முடியும்? ஆனால் கவலை என்னவெனில் நம்மில் யாரோ ஒருவருக்கு அந்த மின்சாரம் பாய்ச்சப்படும் விடையம் ஏற்கனவே தெரிந்திருக்க வாய்ப்பிருக்கும்? ஆனால் கண்டுகொள்ளாத காரணத்தால் கண்ணெதிரியே ஒரு உயிர் காவுகொள்ளப்பட்டுள்ளது!! இனியும் வேண்டாம் இப்படியான பாதுகாப்பற்ற செயலை கண்டால் உடனே நிறுத்துவோம் !!

இபாஸ் போன்ற ஒரு மாணவன், தனது எதிர்காலத்தை கட்டியெழுப்பிக் கொண்டிருந்த வயதில், இவ்வாறு உயிரிழக்க வேண்டிய நிலை நம்மை வெட்கப்பட வைக்கிறது.
ஒரு தாய் தனது மகனை இழந்த துக்கம் …!
ஒரு தந்தை தனது குடும்பத்தின் தூணை இழந்த துயரம் !
ஒரு பள்ளி தனது மாணவனை இழந்த வெறுமை…!
எமது கிராமம் ஒரு எதிர்கால ஆளுமையை இழந்த சோகம்.. !! இவை அனைத்தும் நம் சமூகத்தின் தோல்வியை வெளிப்படுத்துகின்றன.

  1. சட்டவிரோதமாக மின்சாரம் இழுத்தவர் யார் என்ற கேள்வி மட்டும் போதாது!
  2. அந்த செயல் ஏன் அனுமதிக்கப்பட்டது?
  3. ஏன் கண்காணிப்பு இல்லை?
  4. ஏன் பாதுகாப்பு விதிகள் பின்பற்றப்படவில்லை?

இந்த கேள்விகளுக்கு பதில் கிடைக்க வேண்டும்.
குற்றவாளி மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இது பழிவாங்கல் அல்ல—இது அடுத்த உயிரை காப்பாற்றும் பொறுப்பு!

இனி இப்படியான தவறுகள் நடக்கக் கூடாது
நம் கிராமத்தில் பல இடங்களில் தோட்ட வேலிகள், வயல்கள், கால்நடை காப்பு பகுதிகள் ஆகியவற்றில் சட்டவிரோத மின்சாரம் பயன்படுத்தப்படுவது ஒரு திறந்த ரகசியம்.

இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
👉 மின்சார பாதுகாப்பு விழிப்புணர்வு கிராமம் முழுவதும் ஏற்பாடு செய்யப்பட வேண்டும்!
👉 சட்டவிரோத இணைப்புகளை உடனடியாக அகற்றுதல் அவசியம்!
👉 குழந்தைகளுக்கு பாதுகாப்பு கல்வி வழங்கப்பட வேண்டும்!
👉 அரசு மற்றும் மின்சார சபை தமது கண்காணிப்பை வலுப்படுத்தப்பட வேண்டும்!

ஒரு சிறுவனின் உயிர் போய்விட்டது. அவரை நாம் இழந்து விட்டோம், அவரை மீண்டும் கொண்டு வர முடியாது. ஆனால் அவரின் மரணம் வீணாகக் கூடாது.

👉 நாம் அனைவரும் ஒன்றிணைந்து, நம் கிராமத்தை பாதுகாப்பான இடமாக மாற்ற வேண்டும்.
👉 உயிரை காவுகொள்ளும் ஆபத்தை விளைவிக்கும் எல்லா விடயங்களையும் இனம்கண்டு அகற்றும் முயட்சியில் உடனடியாக ஈடுபடுவோம்!

பாதுகாப்பான குச்சவெளி ஒன்றை உருவாக்குவோம்!

இபாஸ் குடும்பத்தாருக்கு KVC Media சார்பில் ஆழ்ந்த இரங்கல்!

அவர்களின் துயரத்தில் நாங்களும் பங்கெடுக்கிறோம். அவர்களின் குரல் நீதிக்காக எழும் வரை, அவர்களுடன் நாங்களும் நிற்போம்.

அல்லாஹ் முழுக்குடும்பத்தாருக்கும் பொறுமையையும் சகித்துக்கொள்ளும் மனோ தைரியத்தையும் வழங்கவேண்டும் என்றும் மரணித்த சிறுவன் இபாஸ் அவர்களுக்கு உயர்ந்த ஜன்னத்துல் பிர்தௌஸை வழங்க வேண்டும் என்றும் பிராத்தனை செய்கிறோம் !

  • ஆசிரியர் : KVC Media

By Admin

Leave a Reply

You missed