சவூதி அரேபிய இராச்சியத்திற்கும் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசுக்குமிடையிலான உறவுகள் பழைமையான வரலாற்றையும் பல தசாப்த கால இராஜதந்திர உறவுகளையும் கொண்டவை.
இரு நாடுகளுக்குமிடையேயான வரலாற்றுத்தொடர்பு பிரதானமாக பொருளாதாரம், கலாசாரம் மற்றும் மனிதவள ஒத்துழைப்பை மையமாகக் கொண்டது. மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் சவூதி அரேபியா இலங்கையின் முக்கிய வர்த்தகப்பங்காளிகளில் ஒன்றாகும்.
வரலாற்று ரீதியாக, இஸ்லாமிய உலகிற்கும் தெற்காசியாவிற்குமிடையேயான வர்த்தகப்பாதைகளில் இலங்கை ஒரு முக்கிய மையமாக விளங்குகிறது. இப்பரிமாற்றங்கள் சவூதி அரேபியாவிற்கும் இலங்கைக்குமிடையிலான கலாசார மற்றும் சமயத் தொடர்புகளுக்கு அடித்தளமிட்டன.
1970 முதல் இரு நாடுகளும் இராஜதந்திர உறவுகளைப் பேணி வருகின்றன. குறிப்பாக, 2024/2025ம் ஆண்டு சவூதி அரேபியாவுக்கும் இலங்கைக்குமிடையிலான இராஜதந்திர உறவுகளின் 50வது ஆண்டு நிறைவு கொண்டாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் சவூதி அரேபியாவின் அபிவிருத்தித் திட்டங்கள்
சவூதி அரேபிய இராச்சியம், இலங்கையின் தேசிய அபிவிருத்தித் திட்டங்களுக்கு ஆதரவளிக்கும் ஒரு முக்கியமான அபிவிருத்திப் பங்காளியாகத் திகழ்கிறது.
சவூதி அரேபிய அபிவிருத்தி நிதியம் (Saudi Fund for Development – SFD) ஊடாக பல்வேறு துறைசார் அபிவிருத்தித் திட்டங்களுக்கு கணிசமான நிதியுதவிகளை வழங்கி வருகின்றது.
கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட மற்றும் தற்போதைய அபிவிருத்தித் திட்டங்களில் சில:
நிதியுதவிகள்:
இலங்கைக்கான சவூதி அரேபியாவின் மொத்த நிதியுதவி $455 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு அதிகமாகுமென தூதுவர் காலித் ஹமூத் அல்கஹ்தானி தெரிவித்துள்ளார்.
வீதி மற்றும் உட்கட்டமைப்பு
அபிவிருத்தி:
நாட்டின் பிரதான வீதி வலையமைப்புகளை மேம்படுத்துதல், கிராமப்புற சாலைகளை அபிவிருத்தி செய்தல்.
சுகாதாரம் மற்றும் கல்வி:
வைத்தியசாலைகள், கல்வி நிலையங்களின் கட்டுமானம் மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு ஆதரவளித்தல்.
நீர் வழங்கல் மற்றும் சுத்திகரிப்பு:
குடிநீர் விநியோகத் திட்டங்கள், நீர் சுத்திகரிப்பு ஆலைகளை அமைப்பதற்கு உதவியளித்தல்.
தூதுவர்களின் பங்களிப்பு:
இலங்கை வளர்ச்சியில் சவூதி அரேபியாவின் பிரதிநிதித்துவம்
இலங்கையிலுள்ள சவூதி அரேபியாவின் தூதுவர்கள், இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகளை வலுப்படுத்துவதில் அளப்பெரிய பங்காற்றியுள்ளனர்.
இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவராலயம் அபிவிருத்தித் திட்டங்களை ஒருங்கிணைத்தல், பொருளாதார உறவுகளை மேம்படுத்துதல் மற்றும் கலாசாரப் பரிமாற்றங்களை வளர்ப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
தற்போதைய தூதுவரான காலித் ஹமூத் அல்கஹ்தானி, இந்த உறவுகளை மேலும் வலுப்படுத்துவதிலும் சவூதி அரேபியாவின் தொலைநோக்குத் திட்டமான ‘விஷன் 2030’ இன் அடிப்படையில் இலங்கையுடனான ஒத்துழைப்புக்களை புதிய பரிமாணத்திற்கு எடுத்துச் செல்வதிலும் தீவிரமாகப் பங்காற்றி வருகின்றார்.
அவர், வர்த்தகம், முதலீடு மற்றும் இலங்கையிலிருந்து சவூதியில் பணி புரியும் தொழிலாளர்களின் நலன்களைப் பேணுவதில் கவனஞ்செலுத்தி, இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தியுள்ளார்.
அண்மையில் சவூதி அரேபியாவின் 95வது தேசிய தினம் இலங்கையிலும் கொண்டாடப்பட்டது.
இத்தருணத்தில், இலங்கை மக்கள் சார்பில் சவூதி அரேபிய மக்களுக்கும், இரண்டு புனிதத்தலங்களின் பாதுகாவலர் மன்னர் சல்மான் பின் அப்துல் அசீஸ் ஆல் சவூத் மற்றும் பட்டத்து இளவரசரும் பிரதமருமான இளவரசர் முகம்மது பின் சல்மான் பின் அப்துல் அசீஸ் ஆகியோருக்கும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இத்தேசிய தினம், சவூதி அரேபிய இராச்சியத்தை மன்னர் அப்துல் அசீஸ் பின் அப்துல் ரஹ்மான் ஆல் சவூத் அவர்கள் 1932 இல் ஒருமைப்படுத்திய வரலாற்றுச் சிறப்புமிக்க நாளை நினைவூட்டுகிறது.
சவூதி அரேபியா ஒரு நூற்றாண்டின் மைற்கல்லை (100 ஆண்டுகள்) நெருங்கிக்கொண்டிருக்கும் இவ்வேளையில், அது அடைந்து வரும் புரட்சிகரமான முன்னேற்றங்களை இலங்கையராக வரவேற்கிறோம்.
‘விஷன் 2030’ இன் கீழ் சவூதி அரேபியா அடைந்து வரும் பிரமாண்டமான வளர்ச்சிக்கும், குறிப்பாக நியோம் போன்ற மெகா நகரத்திட்டங்கள், பொருளாதாரப் பன்முகப்படுத்தல் மற்றும் நிலையான வளர்ச்சித் திட்டங்களில் அதன் துரித முன்னேற்றங்களுக்கும் இலங்கையராக பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
சவூதி அரேபியாவிற்கும் இலங்கைக்குமிடையிலான பலமான நட்புறவு, ஒத்துழைப்பு, எதிர்காலத்தில் மேலும் வளர்ச்சியடைந்து, இரு நாடுகளின் மக்களுக்கும் வளமான, நிலையான எதிர்காலத்தை வழங்க வாழ்த்துகிறோம்.
எம்.என்.எம்.யஸீர் அறபாத் (BA) – ஓட்டமாவடி.