உலக அரசியல், பொருளாதாரம் மற்றும் மனிதாபிமானப் பணிகளில் சவூதி அரேபியா தற்போது முன்னிலை வகிக்கிறது. எண்ணெய் ஏற்றுமதியை மட்டுமே நம்பியிருந்த அந்த நாடு, இன்று பல்துறை முன்னேற்றத்தின் மூலம் சர்வதேசத்தில் புதிய அடையாளத்தைப் பெற்றுள்ளது. இவ்வாறானதொரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியவர் நாட்டின் வாரிசு இளவரசர் முகம்மத் பின் சல்மான் அவர்களாகும்.

அவர் அறிமுகப்படுத்திய “Vision 2030” திட்டம், நாட்டின் பொருளாதாரத்தையும் சமூக அமைப்பையும் முழுமையாக மாற்றும் நோக்குடன் உருவாக்கப்பட்டது. தொழில்நுட்பம், சுற்றுலா, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற பல துறைகளை மேம்படுத்தும் முயற்சிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன் விளைவாக, NEOM போன்ற எதிர்கால நகரத் திட்டங்கள் உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ளன. சுமார் 500 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பில் உருவாகி வரும் இந்த நகரம், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், நவீன தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல்  வாழ்வியல் ஆகியவற்றின் சங்கமமாக இருக்கும்.

நகர அபிவிருத்தி பணிகள் ரியாத் உள்ளிட்ட பல பகுதிகளில் வேகமாக நடைபெற்று வருகின்றன. நவீன வீதிகள், மெட்ரோ ரயில் திட்டங்கள், விமான நிலைய விரிவாக்கங்கள், துறைமுக அபிவிருத்தி போன்ற அடிப்படை கட்டமைப்புகள் சர்வதேச தரத்திற்கு ஏற்ப உயர்த்தப்படுகின்றன. கல்வி துறையில் பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி மையங்கள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் உருவாக்கப்படுகின்றன. இதன் மூலம் சவூதி இளைஞர்கள் உலகளாவிய திறன் கொண்ட பணியாளர்களாக உருவாகும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.

அதேபோன்று, இளவரசர் முகம்மத் பின் சல்மான் தலைமையில் சவூதி அரேபியா மனிதாபிமான துறையிலும் முன்னணி இடத்தைப் பெற்றுள்ளது. KSrelief (King Salman Humanitarian Aid and Relief Center) உலகின் பல்வேறு நாடுகளில் அனர்த்த நிவாரணம், மருத்துவ உதவி, உணவு விநியோகம், குடிநீர் திட்டங்கள், கல்வி ஆதரவு உள்ளிட்ட பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. இலங்கை, பாகிஸ்தான், யேமன், சிரியா, சூடான் உள்ளிட்ட பல நாடுகளில் ஆயிரக்கணக்கான மக்களுக்கு அவசர உதவிகள் சென்றடைகின்றன.

மேலும், “சவூதி நூர்” திட்டம், இலவச கண்புரை அறுவைச் சிகிச்சைகள், பார்வை பரிசோதனைகள், மருந்துகள் வழங்குதல் போன்ற சுகாதார சேவைகளை வழங்கி வருகிறது. பல நாடுகளில் ஆயிரக்கணக்கான நோயாளிகள் இந்த திட்டத்தின் மூலம் பார்வையை மீண்டும் பெற்றுள்ளனர். இதுபோன்ற மனிதாபிமான முயற்சிகள், சவூதி அரேபியாவை வெறும் பொருளாதார வல்லரசாக மட்டுமல்லாமல், உலகளாவிய மனிதநேய பங்குதாரராகவும் மாற்றியுள்ளன.

முகம்மத் பின் சல்மான் முன்னெடுத்து வரும் விரிவான அபிவிருத்தி மற்றும் மனிதாபிமான திட்டங்கள், உலகின் அரசியல் மற்றும் முதலீட்டு வட்டாரங்களில் சவூதி அரேபியாவின் நிலையை உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளன.

இன்று சவூதி அரேபியா, எண்ணெய் ஏற்றுமதி நாடு என்ற பழைய வரையறையைத் தாண்டி, தொழில்நுட்ப முன்னேற்றம், பல்துறை பொருளாதாரம், சர்வதேச விளையாட்டு மற்றும் கலாசார நிகழ்வுகள், மனிதாபிமான உதவிகள் போன்ற பல அம்சங்களில் உலகின் கவனத்தை ஈர்க்கும் நாடாக மாறியுள்ளது. இந்த மாற்றத்தின் முக்கிய கருத்தாவாக இருப்பவர் இளவரசர் முகம்மத் பின் சல்மான் என்பதில் ஐயமில்லை.

✍️ எஸ். சினீஸ் கான்

Leave a Reply