சவூதி அரேபியா மற்றும் இலங்கை நாடுகளுக்கிடையே நீண்டகால நெருங்கிய நட்புறவும், மதபாரம்பரிய ஒற்றுமையும் நிலவுகின்றன. இஸ்லாமிய உறவுகளை மையமாகக் கொண்டு துவங்கிய இந்த உறவுகள், தற்போது பொருளாதாரம், சமூகசேவை, கல்வி, மனிதாபிமானம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் விரிவடைந்து வருகிறது. குறிப்பாக இலங்கையில் நிலவும் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள சவூதி அரேபியா தொடர்ந்து உதவிகளை வழங்கி வருகின்றது. இந்த உதவிகள், இலங்கை மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையில் இருந்துள்ளன.
• மத மற்றும் கலாச்சார உதவிகள்.
இலங்கையில் உள்ள முஸ்லிம் சமூகத்துக்கு மதப்பணிகள், மஸ்ஜித்கள், அரபுக் கல்விக்கான கல்லூரிகளை நிர்மாணிக்கும் பணிகளில் சவூதி அரேபியா முக்கிய பங்களிப்பு அளித்துள்ளது. பல மஸ்ஜித்கள், இஸ்லாமிய நூலகங்கள், ஹிப்ழுல் குர்ஆன் மத்ரஷாக்கள் ஆகியவை சவூதி நிதியுதவியில் நிறுவப்பட்டுள்ளன. இது மட்டுமல்லாது ஹஜ் மற்றும் உம்ரா பயணங்களுக்கு தேவையான உதவிகள், விசா சலுகைகள், வசதியான வழிகாட்டுதல்கள் ஆகியவற்றும் வழங்கப்பட்டுள்ளன.
• பொருளாதார உதவிகள்.
இலங்கையின் பொருளாதார நெருக்கடிகளின் போதும், இயற்கை அனர்த்தங்களுக்குப் பிறகும், சவூதி அரேபியா நன்கு ஆதரவளித்துள்ளது. கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட கடன் நெருக்கடிகளை சமாளிக்க சவூதி அரசு இலங்கைக்கு எரிபொருள் கையளிக்கவும், நிதி உதவிகளை வழங்கவும் உதவியது. குறிப்பாக 2022-23 ஆம் ஆண்டுகளில் இலங்கை மிகுந்த பொருளாதார வீழ்ச்சியை எதிர்கொண்டபோது, சவூதி அரேபியாவிலுள்ள “சவூதி அபிவிருத்தி நிதி” (Saudi Fund for Development – SFD) நிதி உதவிகளை வழங்கியது.
இது தவிர, பல முக்கியமான குடிநீர் திட்டங்கள், பாலங்கள், வீதி அபிவிருத்தி, வைத்திசாலைகள், கல்வி கட்டிடங்கள் போன்ற தொழில்நுட்ப சார்ந்த உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்கள் இந்நிதியின் ஊடாக நிறைவேற்றப்பட்டுள்ளன.
• மனிதாபிமான உதவிகள்.
2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரழிவின் போது, சவூதி அரேபியா இலங்கைக்கு அனுப்பிய நிவாரணப் பொருட்கள், மருத்துவ உபகரணங்கள், தற்காலிக குடியிருப்புகள் உள்ளிட்ட உதவிகள் குறிப்பிடத்தக்கவை. அவை பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் மக்களுக்கு நம்பிக்கையையும் பாதுகாப்பையும் அளித்தன.
மேலும், சவூதி அரசின் கீழ் இயங்கும் “King Salman Humanitarian Aid and Relief Centre” (KSRelief) நிறுவனம், பல்வேறு நேரங்களில் இலங்கையின் கிழக்குப்பகுதி மற்றும் முஸ்லிம் பகுதிகளில் நிவாரணப் பொதிகள், உணவுப் பொருட்கள், மருத்துவச் சேவைகள் போன்றவற்றை வழங்கியுள்ளது.
• கல்வி மற்றும் பயிற்சி உதவிகள்.
சவூதி அரேபியா பல இலங்கை மாணவர்களுக்கு அந்நாட்டு பல்கலைக்கழகங்களில் கல்வி கற்றலுக்கான உதவித் தொகைகளை வழங்கி வருகிறது. இஸ்லாமியக் கல்வி, அரபு மொழிப் பயிற்சி, ஹதீஸ், ஷரீஅத் சட்டம் உள்ளிட்ட துறைகளில் கல்வியறிவு பெற இலங்கை மாணவர்கள் வாய்ப்பு பெற்றுள்ளனர். இது, நாட்டில் உயர் கல்வி நிலையங்களில் இஸ்லாமிய புலமையை வளர்க்கவும் உதவியாக அமைந்துள்ளது.
அதனுடன், ஆசிரியர்களுக்கான பயிற்சிகள், கல்வி தொடர்பான கருத்தரங்குகள், ஆகியவற்றிலும் சவூதி அரசின் ஆதரவு காணப்படுகின்றது.
அண்மையில் கூட வயம்ப பல்கலைக்கழகம் நகர திட்டம் திறந்துவைக்கப்பட்டது.
இருநாட்டு உறவுகளின் வளர்ச்சி
இலங்கை-சவூதி உறவுகள் நாடுகளின் அதிகாரபூர்வ சந்திப்புகளால் மேலும் வலுவடைந்துள்ளன. பல இலங்கைத் தூதுவர்கள் சவூதியில் பணியாற்றியுள்ளதுடன், சவூதி அரசத் தலைமையிலும் இலங்கை அரசின் உயர் நிலை அரசியல்வாதிகள், அமைச்சர் குழுக்கள் ஆகியோர் சந்திப்பு நடத்தியுள்ளனர்.
இவ்வாறு இலங்கை – சவூதி அரேபியா உறவுகள் நீண்டகாலமாக தொடர்கிறது.
✍️ எஸ். சினீஸ் கான்