2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலுக்கான கடமைகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் திருகோணமலை மாவட்டத்தின் தேர்தல் கடமைகளும் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதென மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார அவர்கள் தெரிவித்தார்.

மேலும், திருகோணமலை மாவட்டத்தின் 13 உள்ளூராட்சி சபைகளுக்கான 221 உறுப்பினர்களை தெரிவு செய்யும் தேர்தலாக இது அமைந்துள்ளது. மாநகர சபை ஒன்றும், நகர சபை ஒன்றும், மற்றும் 11 பிரதேச சபைகளுக்குமான தேர்தலாக இது அமைந்துள்ளது. திருகோணமலை, மூதூர், சேருவில ஆகிய  தேர்தல் தொகுதிகளைக் கொண்ட  திருகோணமலை தேர்தல் மாவட்டத்தில் இம்முறை மொத்தமாக 319,399 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

திருகோணமலை மாவட்டத்தில் 321 வாக்களிப்பு நிலையங்களில் நாளைய தினம் (06) வாக்களிக்கும் நடவடிக்கைகள் நிறைவுற்றதும் 129  நிலையங்களில் வாக்கெண்ணல் நடவடிக்கைகள் நடைபெற உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும், தேர்தல் கடமைகளை மேற்கொள்வதற்காக அரச உத்தியோகத்தர்கள் 3820 பேரும், பொலிஸ் உத்தியோகத்தர்கள் 1700 பேரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் எனவும் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

Leave a Reply