(தொகுப்பு: எம்.என்.எம்.யஸீர் அறபாத் (BA) -ஓட்டமாவடி)

ஸ்ரீலங்கா முஸ்லிம் இளைஞர் காங்கிரஸ் கொழும்பு கிளையினரால்(22) ஏற்பாடு செய்யப்பட்ட இரத்ததான முகாமில் கலந்துகொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் கூறியவையாவன:

உலகளாவிய முஸ்லிம்களின் இரண்டு புனிதத் தலங்களான மக்கா, மதீனா ஆகியவற்றின் காப்பாளராக இருக்கின்ற சவுதி மன்னரின் நேரடி கண்காணிப்பிலும் அனுசரணையிலும் அச்சிடப்படுகின்ற திருக்குர்ஆன் பிரதிகள் அரபியிலும், அதே நேரத்தில் பல மொழிகளில் மொழிபெயர்ப்புகளாகவும் இலவசமாக அச்சிடப்பட்டு விநியோகிக்கப்படுகின்ற ஒரு கைங்கரியம் பல வருடங்களாக மன்னருடைய அனுசரணையில் நடைபெற்று வருகிறது.

இதில், தற்போது இலங்கை அரசின் சார்பில் பாதுகாப்புத் துறையினர் தேவையற்ற ஒரு பீதியை ஏற்படுத்துவதற்காக, எங்கிருந்தோ வந்த “பயங்கரவாத நிபுணர்” என்று சொல்லிக்கொள்ளும் ஒருவருடைய அர்த்தமற்ற, விபரீதமான கருத்துக்களை அடிப்படையாக வைத்துக்கொண்டு, இதற்கென்று ஒரு குழுவை அமைத்து, அந்தக் குழுவினருக்கு யார் கொடுத்த அங்கீகாரமோ தெரியாது; அவர்களுடைய சிபாரிசின் பேரில், இந்தக் தமிழ் மொழிபெயர்ப்புகளுக்கான அடிக்குறிப்புகளை இட்டால் ஒழிய, இந்தத் திருக்குர்ஆன் பிரதிகளை விநியோகிக்க அனுமதிக்க முடியாது. குறித்த காரணத்தினால், இவற்றை நாங்கள் அனுப்பி வைத்தவருக்கே திருப்பி அனுப்பி வைக்கப் போகிறோம் என்று அரசாங்கம் எடுத்திருக்கிற இந்தத் தீர்மானம், நீண்டகாலமாக இந்த அரசாங்கம் கோழைத்தனமாக, உப்புச் சப்பில்லாமல், ஒரு மதத்தினரின் மத உணர்வுகளை மதிக்காமல், எதேச்சையாக எடுத்த முடிவாகும்.

எங்களுடைய எல்லாப் பாராளுமன்ற உறுப்பினர்களும் கையெழுத்திட்ட கடிதம் வழங்கிய தருணத்திலும், இதற்கு மாற்றமாகச் செயல்பட எடுத்திருக்கிற இந்தத் தீர்மானம் மிக வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டிய விடயம். இது உடனடியாக வாபஸ் பெறப்பட வேண்டும்.

இந்தக் குழுவில் இருப்பவர்களும், அன்று அவர்கள் மீது பிரயோகிக்கப்பட்ட தேவையற்ற அழுத்தங்களின் காரணமாக இதைச் செய்திருந்தால், அதிலிருந்து அவர்கள் விலகிக் கொள்வது சிறந்தது.

எங்களைப் பொறுத்தமட்டில், இந்த விதமாக மட்டகரமாக முஸ்லிம் சமூகத்தை ஒரு மோதலைத் தூண்டும், பயங்கரவாதத்திற்கு இலகுவில் ஆட்பட்டுப் போகிற ஒரு மதக்குழுவாகவே பார்க்கிற இந்த மஞ்சள் காமாலை நோயில் இருக்கிற உளவுத்துறையினர், அவர்களுக்கு மேல் தேவையற்ற அழுத்தங்களைப் பிரயோகிக்கின்ற ஒரு சிலர், மதரீதியாக இருக்கின்ற உண்மையான முஸ்லிம்களுடைய உணர்வுகளை மதித்து இந்த விடயத்தில் செயல்பட வேண்டும்.

உலக நாடுகள் பலவற்றில் மிக வெளிப்படையாகவே இது விற்பனைக்கு இருக்கிறது. இந்த நாட்டில் கூட, இதே பிரதிகள் புத்தகச் சாலைகளில் விலை கொடுத்து வாங்கக்கூடிய நிலைமை இருக்கிறது. தேவை என்றால், இணையதளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இப்படி இருக்கின்றபோது, இதைத் திருப்பி அனுப்புங்கள் என்று சொல்வதில் எந்த அர்த்தமும் இல்லை. போதாதற்குப் பக்கத்து நாட்டிலும் கூட இந்தக் குர்ஆன் பிரதிகள் தாராளமாக இருக்கின்றன.

எனவே, ஏன் எங்களுடைய நாட்டில் மட்டும் இவ்வளவு தூரம் முஸ்லிம்களுடைய மத உரிமைகளில் மூக்கை நுழைக்கிற விதத்தில் இந்த அரசாங்கம் இந்தத் தீர்மானத்தை எடுத்திருக்கிறது என்பது மிகவும் விசனத்துக்குரிய விடயம்.

எனவே, இதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்தச் சிபாரிசைச் செய்த குழுவினர் எடுத்தது பிழையான தீர்மானம் என்று மீண்டும் நான் இதைத் தெளிவாகக் கூறிப் பதிவு செய்கிறேன்.

எனவே, இந்தத் தீர்மானம் வாபஸ் பெறப்படுவது மாத்திரமல்ல; அவர்களுக்கு மேல் அன்றிருந்த அழுத்தத்தின் காரணமாக அப்படி ஒரு தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தால், அதை எங்களால் புரிந்துகொள்ள முடியும். இருந்தாலும், இவ்வாறான ஒரு விடயத்தில், அரசியல் தலைவராகிய எங்களோடும் குறைந்த அளவிலாவது ஒரு கலந்தாலோசனை நடத்தப்பட்டிருக்க வேண்டும்.

அது ஒன்றுமே இல்லாமல், இப்படி எழுந்தமானமாக அவர்கள் முடிவெடுத்து, அதை இலகுவாக எடுத்ததற்கெல்லாம் முஸ்லிம்கள் மீது பயங்கரவாதச் சட்டத்தைப் பாவித்து, பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகக் குரல் கொடுத்தாலும், இஸ்ரேலர்களுடைய நடவடிக்கைகளைக் கண்டித்துப் பேசினாலும் கைது செய்து வாக்குமூலம் எடுப்பதற்கு அழைத்துப்போகின்ற இந்த அரசாங்கத்தினர், இப்படி எங்களைத் தொடர்ந்து அவமானப்படுத்திக் கொண்டிருக்காமல், இந்த விவகாரத்தில் எடுத்த முடிவை உடனடியாக அவர்கள் மாற்றியாக வேண்டும் என்பது என்னுடைய விநயமான வேண்டுகோள். இதில் எந்த உடன்பாடும் எங்களுக்கு இல்லை.

எனவே, அரசு எடுத்த முடிவு பிழையானது. இந்த குழுவின் சிபாரிசை ஏற்றுக்கொள்ள முடியாது. வேறு எந்த நாட்டிலும் இப்படி குர்ஆன் பிரதிகளுக்கு அடிக்குறிப்பு கூட வேண்டும், இல்லை என்றால் அதை நாங்கள் விநியோகிக்க அனுமதிக்க மாட்டோம் என்றவாறான முடிவுகள் எடுக்கப்பட்டதாக நாங்கள் அறியவும் இல்லை; எங்களுக்கு அறியக் கிடைக்கவும் இல்லை.

எனவே, இப்படித் தேவையற்ற ஒரு விபரீதமான தீர்மானத்தை இந்த நாட்டின் முஸ்லிம் சமூகத்தின் மீது திணிப்பதற்கு யாரும் எத்தனிக்கக் கூடாது; எத்தனிக்க விடவும் மாட்டோம் என்று நான் மிகத் தெளிவாகத் தெரிவித்துக்கொள்கிறேன்.

பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு விநியோகிக்கப்படுவது என்பது வழமையாக நடந்துகொண்டிருக்கிறது.

இதில் திருக்குர்ஆனைப் பொறுத்தமட்டில், அதனுடைய மொழிபெயர்ப்புகளில் பிழை திருத்தம் செய்வதற்கு இங்கு இருக்கிற இந்த நாட்டின் உளவுத்துறைக்கோ அரசாங்கத்துக்கோ எந்த அதிகாரமும் கிடையாது. அவர்கள் இதிலே திருத்தம் செய்யப்பட வேண்டும், இல்லை என்றால் இறக்குமதி செய்யக்கூடாது என்று சொல்வதற்கும் அதிகாரம் இல்லை என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.

இது சம்பந்தமாக முஸ்லிம் சமூகம் விசனம் அடைந்திருக்கிறது, கவலை அடைந்திருக்கிறது. சுருங்கச் சொல்லப் போனால், இறுதியாக அரசாங்கம் எடுத்திருக்கின்ற தீர்மானம் இந்த நாட்டு முஸ்லிம்களினால் முழுமையாகக் கண்டிக்கின்ற ஒரு விடயமாக மாறியிருக்கிறது. இதை அரசாங்கம் உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பார்க்கிறோம்.

அல்லது, இந்தத் தீர்மானத்திற்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது தேவையற்ற பீதியினால், அச்சத்தினால் அதற்கு அடிக்குறிப்புகள் இட வேண்டும், இல்லை என்றால் அந்த மொழிபெயர்ப்புகளை விநியோகிக்க முடியாது என்று சொல்கின்றவர்கள்,ஏற்கனவே இந்த மொழிபெயர்ப்புப் பிரதிகள் புத்தக நிலையங்களிலே விற்பனைக்கு இருக்கிறது. தேவை என்றால் இணையதளத்தில் தேவையானவர்கள் அதைத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இப்படி எல்லாம் இருக்கின்றபோது,இப்படி உப்புச் சப்பில்லாத விதத்தில் ஒரு மதத்தினருடைய மத உரிமைகளிலே தேவையற்ற விதமாக ஒரு பீதியை ஏற்படுத்தி, 1400 வருடங்களுக்கு மேலாக ஓர் அட்சரமும் மாற்றாமல் இருக்கிற ஒரு வேதப் பிரதியை இப்படி கேவலப்படுத்துகின்ற மாதிரி நடந்துகொள்வது என்னைப் பொறுத்தமட்டில் மிக மிக மோசமான, கண்டிக்கத்தக்க விவகாரமாகும் எனக் குறிப்பிட்டார்.

Leave a Reply