இலங்கையில் தற்போது வாட்ஸ்அப் (WhatsApp) மற்றும் டெலிகிராம் (Telegram) தளங்களை மையப்படுத்தி புதிய வகை நிதி மோசடிகள் அதிகரித்துள்ளதாக இலங்கை பொலிஸ் தலைமையகம் பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.

மோசடி நடப்பது எப்படி?

மோசடியாளர்கள் திருமண அழைப்பிதழ்கள், மின்சாரப் பட்டியல் அல்லது பரிசுச் சீட்டு வென்றதற்கான அறிவிப்புகள் போன்ற பெயர்களில் ஆபத்தான “.apk” கோப்புகளை (Malicious Files) அனுப்புகின்றனர். இதனை ஒரு பயனர் தரவிறக்கம் செய்து கிளிக் செய்தவுடன், அவரது கைப்பேசியில் மர்ம மென்பொருள் ஒன்று தானாகவே நிறுவப்படுகிறது.

OTP திருடப்படும் அபாயம்:

இந்த மென்பொருள் மூலம் ஹேக்கர்கள் உங்கள் கைப்பேசியின் திரையை தூரத்தில் இருந்தே கண்காணிக்க முடியும். மிக முக்கியமாக, உங்கள் வங்கி கணக்குகளுடன் இணைக்கப்பட்ட இரகசிய OTP (One Time Password) இலக்கங்களை அவர்கள் இலகுவாக வாசித்து, கணக்கில் உள்ள பணத்தை திருடிவிடுகின்றனர்.

பொலிஸார் வழங்கியுள்ள பாதுகாப்பு ஆலோசனைகள்:

• தெரியாத நபர்களிடம் இருந்து வரும் எந்தவொரு “.apk” கோப்புகளையும் தரவிறக்கம் செய்ய வேண்டாம்.

• நண்பர்களிடம் இருந்து வந்தாலும், உறுதிப்படுத்தாமல் எதனையும் கிளிக் செய்ய வேண்டாம்.

• மென்பொருள்களை தரவிறக்கம் செய்ய கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோர் (Apple App Store) ஆகியவற்றை மட்டுமே பயன்படுத்துங்கள்.

• கைப்பேசி அமைப்புகளில் (Settings) ‘Install Unknown Apps’ எனும் வசதியை செயலிழக்கச் செய்யுங்கள்.

பாதிக்கப்பட்டதாக சந்தேகம் ஏற்பட்டால், உடனடியாக உங்கள் வங்கி கணக்குகளை இடைநிறுத்துவதுடன், அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திலோ அல்லது குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் (CID) கணினி குற்றப்பிரிவிலோ முறைப்பாடு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளீர்கள்.

உண்மைத்தன்மை உறுதிப்படுத்தப்பட்ட மற்றும் உடனுக்குடனான செய்திகளுக்கு www.kuchchaveli.com உடன் இணைந்திருங்கள்.

By Admin