செயற்கை நுண்ணறிவு திட்டத்தில் சீனாவை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில் காய் நகர்த்தப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் சில முன்னெடுப்புகளை கையில் எடுத்திருப்பது தெரிய வந்துள்ளது.
தொழில்நுட்ப வளர்ச்சி மிக வேகமாக நடைபெற்று வரும் சூழலில், அதற்கேற்ப உலக நாடுகளும் தங்களை தயார்படுத்தி வருகின்றன. தற்போது செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏ.ஐ தொழில்நுட்பத்தில் தங்களது ஆதிக்கத்தை செலுத்த மும்முரம் காட்டி வருகின்றனர். குறிப்பாக ஓபன் ஏஐ நிறுவனம் அறிமுகம் செய்த சாட் ஜிபிடி புதிய புரட்சியை உருவாக்கியது. இதற்கு போட்டியாக பல்வேறு நிறுவனங்களும் களத்தில் இறங்கின.
குறிப்பாக சாட் ஜிபிடிக்கு போட்டியாக சீனாவின் டீப் சீக் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. குறைந்த செலவில் மிகவும் அறிவுப்பூர்வமான சாட் பாட்டை உருவாக்கி ஆச்சரியப்படுத்தினர். அதேசமயம் டீப் சீக் என்பது சாட் ஜிபிடியின் காப்பி தான் என்ற விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன. இந்நிலையில் சீன அதிபர் ஜி ஜின்பிங் அவர்கள் ஏ.ஐ தொழில்நுட்பத்தில் மிக வேகமாக முன்னேற வேண்டும் என்று திட்டமிட்டுள்ளார்.
சீன அதிபர் ஜி ஜின்பிங் வலியுறுத்தல்
பிற நாடுகளுக்கு மிகவும் வலுவான போட்டியை அளிக்கும் வகையில் அடுத்த அடியை எடுத்து வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். முன்னதாக புதிய தொழில்நுட்பங்கள் தொடர்பாக ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் உடன் முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
இதில் கலந்து கொண்டு பேசிய அதிபர் ஜி ஜின்பிங், ஏ.ஐ துறையில் சுயசார்பு தன்மை, தொழில்நுட்ப வளர்ச்சியை வலுப்படுத்துதல், தொழில்நுட்ப உபகரணங்களை திரட்டுதல், அப்ளிகேஷன் அடிப்படையிலான மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் அளித்தல், ஏ.ஐ துறையில் சீரான வளர்ச்சியை உறுதி செய்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளார். மேலும் பேசுகையில், செயற்கை நுண்ணறிவு என்பது மிகவும் திறன் வாய்ந்த தொழில்நுட்பம்
இது தொழில்நுட்ப பரிணாமம் மற்றும் தொழில்துறை மாற்றத்தில் புதிய வளர்ச்சியை எட்டுவதற்கு உறுதுணையாக விளங்குகிறது. மனிதர்கள் எவ்வாறு புதிய விஷயங்களை படைப்பார்களோ, அதேபோல் ஏ.ஐ செயல்படும் அளவிற்கு வளர்ந்துள்ளது. இருப்பினும் அடிப்படை தியரி மற்றும் கீ கோர் டெக்னாலஜியில் சில குறைபாடுகளும், இடைவெளியும் உள்ளது. இதனை சரிசெய்ய சீனா பாடுபட வேண்டும் என்று ஜி ஜின்பிங் கேட்டுக் கொண்டார்.